ட்ரான்ஸ்ஜெண்டெர் பிள்ளைகள் பெற்றோர் வழிகாட்டி.

English | Bahasa Melayu | 中文

உன்னோடு நான் வருவேன் ஓர் அறிய தொகுப்பாகும். மாறிவரும் சமுதாய தாக்கங்களை சமாளிக்க, பெற்றோர்களுக்கு தேவையான வழிமுறைகளும், அணுகுமுறைகளையும் நாங்கள் சுருக்கமாக தொகுத்து அளித்திருக்கிறோம். பிள்ளை மாறும் போது, நமக்கும் அவர்களுக்கும் பயமும், குழப்பமும், கவலையும், சந்தேகமும் ஏற்படுவது இயற்கையே. அமைதியாக இருங்கள். இந்த தொகுப்பை படியுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.

பெற்றோர்களாகிய நமக்கு நம் குழந்தைகளின் நலனும் சந்தோஷமும்தான் முக்கியம். அன்பு செலுத்துவோம், அரவணைப்போம். அவர்களுடன் சேர்ந்து நடப்போம்.
— திரு தேஹ் தியன் யோங் (Teh Tien Yong) திருநம்பி உட்பட 4 பிள்ளைகளின் தந்தை

உன்னோடு நான் வருவேன் ட்ரான்ஸ்ஜெண்டெர் பிள்ளைகளை கொண்ட பெற்றோர்களுக்காக தொகுக்கப்பட்டது. ட்ரான்ஸ்ஜெண்டெர் என்றால் என்ன, மாறும் முறை என்ன? உங்கள் குழந்தையின் அடையாளத்தை உறுதி படுத்தும் கட்டத்தில், உங்களுக்கு குழப்பமும், வேதனையையும் ஏற்படலாம். இந்த தொகுப்பு உங்களுக்காகவே Oogachaga, Project X, The T Project, Transgender SG போன்ற ஸ்தாபனங்களில் பணிபுரியும் ட்ரான்ஸ்ஜெண்டெர் பிரதிநிதிகளால் மிக எளிமையாக வடிவமைக்க பட்டுள்ளது.

எனக்கு உங்கள் வழிகாட்டி புத்தகம் வேண்டும்

ஆங்கிலம், சீனம் மற்றும் மலாய் மொழி பதிப்புகளிலும் கிடைக்கிறது.

வழிகாட்டி ஒரு கேள்வி மற்றும் பதில் பாணியில் எழுதப்பட்டுள்ளது, மேலும் கேள்விகளின் தன்மையின் அடிப்படையில் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தால், வழிகாட்டியைத் தவிர்க்கலாம். ஆனால், எங்கு செல்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், ஆரம்பத்தில் இருந்து தொடங்குவது எப்போதும் நல்லது.

செல்லவும்

ஏன் என் பிள்ளை ட்ரான்ஸ்ஜெண்டெர்?

அப்படினா என்ன? : பாலின அடையாளம் | பாலின அறியாமையல் வரும் மனஉளைச்சல் | எதனால் ட்ரான்ஸ்ஜெண்டெர் | மாற்றம் | சமுதாயத்தில் மாற்றம் | சட்ட ரீதியாக மாற்றம் | ஹோமோன் மாற்று சிகிச்சை | பாலினிதை உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சை | மாற்றத்துடன் வரக்கூடிய ஆபத்து | சிங்கப்பூரில் ட்ரான்ஸ்ஜெண்டெர் ஆணோர் எதிர் நோக்கும் சவால்கள்

எப்பொழுது...: எப்போது , குழந்தைகள் தங்கள் பாலினத்தை உணருகிறார்கள்? | எப்போது என் பிள்ளைக்கு இந்த மாற்றம் தேவை?

எப்படி…: நான் இதை சமாளிக்க முடியுமா? | என் குழந்தையின் பாலின அடையாளத்தைப் பற்றி நான் அவர்களிடம் பேசலாமா? | எப்படி எனக்கும் என் பிள்ளைக்கும் ஆதரவு தேடுவது?

நான் யாரிடம் பேச முடியும்?

எங்களுக்கு எங்கே உதவி கிடைக்கும்?

2022 © Oogachaga வெளியீடு

ஏன்…

… என் பிள்ளை ட்ரான்ஸ்ஜெண்டேராக  ஏன் இருக்கவேண்டும்? இது என் தவறா?

உங்கள் பிள்ளை ட்ரான்ஸ்ஜெண்டெராக இருப்பது யார் தவறும் அல்ல, நீங்கள் உட்பட. பாலின மாற்றத்தை சமாளிப்பது அவரவர் விருப்பமாகும். இருப்பினும், ட்ரான்ஸ்ஜெண்டெராக இருப்பது அவர்களுடைய முடிவும் அல்ல. 

நாம் எதிர்பார்த்தது போல், நம் பிள்ளை இல்லாத போது, நமக்கு குழப்பமும் வேதனையும் இருக்கதான் செய்யும். உங்கள் பிள்ளை ட்ரான்ஸ்ஜெண்டெராக வெளிவர நீங்கள் காரணமல்ல. சிங்கப்பூரில், ட்ரான்ஸ்ஜெண்டெர் நபர்கள் குற்றவாளிகளும் அல்ல. அவர்கள் பிறருக்கு தொல்லை விளைவிப்பவர்களும் அல்ல.

… ஏன் எந்த அறிகுறியும் இல்லாமல் என் பிள்ளை ட்ரான்ஸ்ஜெண்டெராக வெளி வருகிறது? 

ட்ரான்ஸ்ஜெண்டெர் பிள்ளைகள் குறிப்பிட்ட ஒரு வயதில் தாங்கள் ட்ரான்ஸ்ஜெண்டெர் என்று வெளிப்படுத்துவர் என்றும், அப்படி இல்லாவிட்டால் அவர்கள் ட்ரான்ஸ்ஜெண்டெர் அல்ல என்றும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. 

ஒரு சில ட்ரான்ஸ்ஜெண்டெர் நபர்கள், இளவயதிலேயே தங்களை வெளிப்படுத்திக்கொள்வதுண்டு. சிலர் சிறிது தாமதமாக வெளிப்படுத்திக்கொள்வர்.  சில ட்ரான்ஸ்ஜெண்டெர் குழந்தைகளுக்கு வளரும் பொழுது, அவர்கள் அணியும் ஆடை வகைகலில் எந்த பிரச்சனையும் இருக்காது.  ட்ரான்ஸ்ஜெண்டெர் நபர்கள் தங்கள் அடையாளத்தை, பல தரப்பட்ட விதத்தில் வெளிப்படுத்திக்கொள்வர்.

ட்ரான்ஸ்ஜெண்டெராக இருக்கும் ஒவொருவரும், தங்கள் சூழ்நிலைக்கேற்ப தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். நீங்களும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் என்ன நினைப்பார்கள்  என்ற அச்சம் இருக்கலாம். தக்க தருணம் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றும் நினைக்கலாம். 

இதற்கு எது சரியான வழி எது தவறான வழி என்பதோ, எது தவறான நேரம் எது தவாறன் நேரம் என்பது இல்லை. அவர்கள் வாழ்வில் இது ஒரு முக்கியமான பயணம். நம் பிள்ளைகள் நம்மை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் அவர்களை அரவணைக்க வேண்டும். 

ஏன் என் பிள்ளைக்கு சுய பாலினத்தை அறிய முடியாமல் இருக்கிறதா? தன்னை இருபாலினமாய் என் பிள்ளை நம்புகிறதா? அல்லது தான் வேறொரு பாலினம் என்று நினைக்கிறதா?

சில ட்ரான்ஸ்ஜெண்டெர் குழந்தைகள் தங்களை வேறொரு பாலினமாக பாவிக்கும் பொது, பெற்றோர்களுக்கு அவர்களை புரிந்துகொள்வதில் சிரமம் இருக்க கூடும்.

சிலர் தம்மை ஆண் / பெண் என்ற அடையாளத்திலேயே வெளிப்படுத்திக்கொள்ளலாம். மேலும் சிலர், தம்மை வேறு விதமாகவும் வெளிப்படுத்தி கொள்ளலாம்!

 இது குழப்பத்தின் அடையாளம் அல்ல. சுய பாலினத்தை வித்யாசமாக புரிந்துகொள்வது என்று பொருள்.

… ஒரே பாலின சேர்க்கையில் ஆர்வம் இருக்கிறதுதென்று என் பிள்ளை சொல்லும்போது , அவன் ஏன் மாறவேண்டும்? மாறாமல் இருப்பது எளிதல்லவா? 

இப்படியும் யோசித்து பாருங்கள் - ட்ரான்ஸ்ஜெண்டெர் அல்லாத ஒருவர், தமக்கு ஒரே பாலின ஈடுபாடு பிடிக்கும் என்று சொன்னால், அவர்களை மாறிவிடு என்று கூறுவீர்களா?

உங்கள் பிள்ளை தன் சுய பாலின படி வாழ்வை அமைத்துக்கொள்ளலாம். ஆனால், அந்த வாழ்க்கை  அவர்களுக்கு நிம்மதியை தருமா? 

எடுத்துக்காட்டுக்கு, அவர்கள் தங்கள் வாழ்க்கை துணைகளுடன், தங்கள்   உண்மையாக உணர்வுகளை சொல்ல முடியாமல் தவிக்க நெருடுகிறது. சமுதாயத்தில் இவர்கள் ட்ரான்ஸ்ஜெண்டெர் அல்லாத  தம்பதிகளை போல் இருந்தாலும், உண்மை அதுவல்ல.

பாலின அடையாளம் என்பது, அன்பு / காமம் / உடலுறவு போன்றவற்றுக்கு அப்பாற்பட்டது. ட்ரான்ஸ்ஜெண்டெர் அல்லாதவர் கூட, பல விதமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். இதற்கு ட்ரான்ஸ்ஜெண்டெர் விதிவிலக்கல்ல.


என்ன…

… பாலின அடையாளத்தை பற்றி பேசும்போது , பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் யாவை?

செக்ஸ் vs. பாலினம்

நமது சமுதாயத்தில் பொதுவாக பாலினம் மற்றும் பாலியல் வார்த்தைகளை கொச்சை படுத்தி பார்ப்பது சகஜமாக உள்ளது. இவை இரண்டும் வெவ்வேறு அர்த்தம் உள்ளவை.

குழந்தையின் நிறப்புரிகல் மற்றும் பிறப்புறுப்பை பார்த்தும் கணிக்கப்படுவதே - செக்ஸ். பொதுவாக, ஆண் அல்லது பெண் என்று வகைப்படுத்துவர். கிரோமோசோம்கள் தெளிவில்லாமல் இருக்கும்போதும், பிறப்புறுப்பு முழுமை அடையாமல் இருக்கும் போதும், இடை பாலினமாக வகைப்படுத்தப்படுகிறது.  

பாலினம் (Gender) என்பது, சுய புரிதலை உணர்த்துவது. பெண்ணாய் பிறந்த குழந்தை தன்னை பெண்ணாய் உணர்ந்து வளர்வதும், ஆனாய் பிறக்கும் குழந்தை தன்னை ஆண்ணாக உணர்ந்து வளர்வதை குறிப்பதே சிஸ்ஜெண்டெர் (cisgender) என்பதாகும். சிலர், பிறக்கும் போது கொடுக்கப்பட்ட அடையாளத்தை, வளரும் போது புரிந்துகொள்வதில்லை. இவர்களை ட்ரான்ஸ்ஜெண்டெர் என்று வகைப்படுத்துவோம்.

ட்ரான்ஸ்ஜெண்டெர் அல்லது (சுருக்கமாக) ட்ரான்ஸ் என்று யாரை அழைக்கிறோம்? யாரொருவர் பிறக்கும் போது கொடுக்கப்பட்ட அடையாளத்தை ( ஆண் / பெண்) புரிந்து கொள்ள வில்லையோ, பொதுவாக பாலின சந்தேகங்கள் உள்ளவர்களை ட்ரான்ஸ்ஜெண்டெர் என்று அழைக்கிறோம். இதில் பல வகைப்படும்.

ட்ரான்ஸ்ஜெண்டெர் சிறுவர்கள்/ஆண்கள் - பெண்ணாக பிறந்த ஆண் பிள்ளையையை / ஆணை, (அவன்/அவர்) என்ற பிரதிபெயர் கொண்டு அழைக்கிறோம்.

ட்ரான்ஸ்ஜெண்டெர் சிறுமிகள்/பெண்கள் - ஆணாக பிறந்த பெண் பிள்ளையையை / ஆணை, (அவள்) என்ற பிரதிபெயர் கொண்டு அழைக்கிறோம்.

ஆண் அல்லது பெண் என தங்கள் பாலின அடையாளத்தை வெளிப்படுத்தாதவர்களுக்கு வழங்கப்படும் பொதுவான சொல். இவை இரண்டும் அல்லாதவர்களை, (அவர்கள்) என்று அழைக்கிறோம்.

பாலின அடையாளங்களுடன் ஒத்துப்போகாதவர்களுக்கு (gender non-conforming people) சுய பாலின அடையாளத்தை வெளிப்படுத்தாதோருக்காக கொடுக்கப்பட்ட ஒரு பொதுவான சொல். இவர்களில் சிலர், தங்களை ட்ரான்ஸ்ஜெண்டெர் என்று அடையாளம் காட்டிக்கொள்வதுண்டு. சிலர் காட்டிக்கொள்வதில்லை இது போன்றவர்களை நாம் விமர்சிக்க தேவையில்லை. ஒரு சிலர் மருத்துவ ரீதியாக அல்லது சமூக ரீதியாக மாற்றங்களை கண்டிருக்கலாம். பொதுவாக பாலின அடையாளங்களுடன் ஒத்துப்போகாதவர்களுக்கு (gender non-conforming people), அவரவர் எண்ணம் போல் வாழ்வதுண்டு. ஆயினும், பாலின சூழல்களில் சங்கடங்களை எதிர் நோக்கலாம்.

பாலின அடையாளம் என்பதற்கு ஒரு சில வார்த்தைகளே உள்ளன. உங்கள் பிள்ளை தன்னை பற்றி விவரிக்கும் முறையை ஆராயுங்கள். அவர்களிடம் அணுக்கமாக பேசி, அவர்களை புரிந்துகொள்ள பாருங்கள். இங்கே நீங்கள் பல விஷயங்களை தெரிந்துகொள்வதோடு, உங்கள் பிள்ளையும் நீங்கள் காட்டும் அக்கறையையும்/அன்பையும் புரிந்துகொள்ளும். இது எல்லோருக்கும் சுமுகமான நிலை தானே?

… 'பாலின டிஸ்ஃபோரியா'?

அதீத மகிழ்ச்சியின் உணர்வுகளை விவரிக்கும் 'Euphoria' என்ற வார்த்தையை நீங்கள் நன்கு அறிந்திருக்கலாம். டிஸ்ஃபோரியா, இது எதிர்ச் சொல்லாகும், இது ஒரு தீவிர அமைதியின்மை மற்றும் மகிழ்ச்சியற்ற உணர்வை விவரிக்கிறது.

Gender dysphoria — ஒரு அதிருப்தி நிலையை குறிக்கும். எண்ணங்கள் அலைமோதும் ஒரு நிலை. உடலும் எண்ணமும் ஒன்று சேராத போது, அங்கே நிம்மதி இருக்காது. சமுதாயத்தில் தங்களை யாரும் புரிந்துகொள்ளாத போது, மெம்மேலும் விரக்திதான் மிஞ்சும்.

சுய பாலின இணக்கத்தில் திருப்தி இல்லாத நிலையில், ஒருவர் மாறுவதுண்டு. அது மருத்துவ வழியாக இருந்தாலும் சரி, அல்லது சமூக வழியாக இருந்தாலும் சரி, மாற விழையும் நபர்கள் பல் வேறு நிலைகளில் அதே அதிருப்தியையும் எதிர்நோக்கலாம்.

மறுபுறம், ட்ரான்ஸ்ஜெண்டெராக மாறிய ஒருவர், தம் சுய அடையாளத்தில் திருப்தி அடையலாம். சமூகத்தில் அவர்களுக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது, இன்னும் மகிழ்ச்சி அடைவர்.

நோயறிதல் மற்றும் புள்ளியியல் கையேட்டின் (DSM-V) ஐந்தாவது பதிப்பு பாலின டிஸ்ஃபோரியாவைக் கண்டறிவதற்கான அளவுகோல்களை உள்ளடக்கியிருந்தாலும், சில டிரான்ஸ் நபர்கள் கண்டறியும் அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனால் சில வகையான மாற்றங்களிலிருந்து பயனடைவார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

… ஒருவர் ட்ரான்ஸ்ஜெண்டெர் ஆக காரணம் என்ன?

ஒருவர் ட்ரான்ஸ்ஜெண்டெர் ஆக மாற, குறிப்பிட்ட காரணங்கள் ஏதும் இல்லை. அவரவர் தம்மை புரிந்துகொள்வதும், சமூக அளவில் அவர்கள் எதிர்நோக்கும் எதிர்மறை சவால்களும் காரணங்களாக இருக்கலாம்.

உயிரியல் தாக்கங்கள், குறிப்பாக பிறப்புக்கு முந்தைய வளர்ச்சியின் போது பாலியல் ஹார்மோன்களின் செயல்பாடு மற்றும் பாலின-ஹார்மோன் சமிக்ஞை மற்றும் செயலாக்கம் தொடர்பான மரபணு மாறுபாடுகளுக்கு வலுவான சான்றுகள் உள்ளன. மகப்பேறுக்கு முற்பட்ட ஹார்மோன் அளவுகள் மற்றும் மரபணு செல்வாக்கு போன்ற காரணிகள் ட்ரான்ஸ்ஜெண்டெர் அடையாளங்களின் வெளிப்பாட்டிற்கு பங்களிக்கின்றன என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.

உயிரியல் காரணிகள் ஒருவர் டிரான்ஸ் ஆவதற்கு எவ்வளவு சாத்தியம் என்பதை தீர்மானிக்கலாம், ஆனால் இது ஒரு டிரான்ஸ் அடையாளமாக திடப்படுத்துகிறதா — பொதுவாக வாழ்க்கையின் ஆரம்பத்தில் அல்லது பருவமடையும் போது — மற்ற காரணிகளைச் சார்ந்து இருக்கலாம். ஒரு சிலருக்கு, குடும்ப வழி வரக்கூடும். கும்பத்தில் உடன் பிறந்தோர் அல்லது உறவினர்கள் ட்ரான்ஸ்ஜெண்டெர் ஆக இருக்கலாம்.

நாம் வாழும் சமுதாயத்தில் நாம் வளரும் முறை, பின்பற்றும் நாகரீகம் / கலாச்சாரம் போன்றவையே நமக்குரிய அடையாளத்தை மெருகேற்றி காட்டுகின்றன. ட்ரான்ஸ்ஜெண்டெராக விளையும் ஒருவரை குற்றவாளியாக ஒரு சமுதாயம் கருத்துமாயின், அச்சமுதாயத்தில் வாழும் ட்ரான்ஸ்ஜெண்டெராக, பல இன்னல்களை அடையக்கூடும். அதே சமயம், சமூக ஆதரவு ஒருவற்கு கிடைத்தால், அவர் / அவள் மாறி வர சுலபமாக இருக்கும்.

எல்லா மனிதர்களிலும் பாலியல் பன்முகத்தன்மை உள்ளது; இயற்கை நமக்கு அளித்த பாலினம் ஒன்றாக இருந்தாலும், உடல் ரீதியாக பல குறை நிறைகளும் உண்டு. பெண்களுக்கு முக சருமம் அதிகரித்து,மீசை/தாடி   காணப்படுவதும், ஆண்களுக்கு மார்பகம் போன்று அமைப்பு இருக்கத்தான் செய்கிறது.  இது ஆண் அல்லது பெண் என எளிதில் வகைப்படுத்தப்படாத உடல்வாகு கொண்ட மக்களில் இது மிகவும் குறிப்பிடத்தக்கது.

ட்ரான்ஸ்ஜெண்டெராய் இருக்க ஒருவர் விழைகிறார் என்றால், அது அவருடைய முடிவல்ல, அதை யாராலும் நிறுத்தவோ / மாற்றவோ முடியாது. பாலின அடையாளத்தில் குழம்பி இருப்பவர்கள் நோயாளிகளும் அல்ல. தவறு ஏதும் நேர்ந்து விடவில்லை. இது போன்றவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதை பற்றி, வரும் பகுதிகளில் காணலாம்.

வேடிக்கையான உண்மை: திருநங்கைகள் மற்றும் பாலினம்-பன்முகத்தன்மை கொண்ட நபர்கள் நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்டும் அரவணைக்கப்பட்டும் உள்ளனர்! ஆதி மனிதன் காலத்திலிருந்தே, இது வழக்கத்தில் உள்ளது. பற்பல நாகரீகங்களையும் தாண்டி, அமெரிக்கா பழங்குடியினர் வழி, நம் முன்னோர்களிடம் வந்து சேர்ந்துள்ளது. இந்தியாவில் இவர்களை ஹிஜ்ராஸ் என்றும், பூகிஸ் இனத்தவரிடையே, இவர்களை, calalai, அல்லது calabai அல்லது bissu என்றும் அழைப்பதுண்டு!

… மாறுவது என்றல் என்ன? 

மாறுவது என்றால், ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு தயார்படுத்துதல் என்று பொருள். ஆணாய் பிறந்த ஒருவர், தம்மை பெண்ணாய் உணரும்போது, அதற்கு ஏற்றாற்போல், நடை உடை பாவனை மட்டும் அல்லாது, உடல் உறுப்புகளிலும் மாற்றம் செய்துகொள்வதாகும். இன்றைய காலத்தில், இது போல் மாற விழையும் ஒருவற்கு, சட்டபூர்வமாகவும், மருத்துவ ரீதியாகவும், சமுதாயத்தில் வாய்ப்புள்ளது. 

சமூக மாற்றம் 

சமூக மாற்றம் என்பது ஒரு நபர் எடுக்கும் முதல் படியாகும், மேலும் இது கடினமான ஒன்றாக இருக்கலாம். இதில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்

பெயர் மற்றும் பிரதி பெயரை மாற்றுதல்

பொதுவாக யாரும் அவர்கள் பெயர் பற்றியோ, பிரதி பெயர் பற்றியோ கவலை கொள்ள தேவையில்லை. ஆனால், ட்ரான்ஸ்ஜெண்டெர் போன்றோர் தங்கள் இயல்புக்கு ஏற்றவாறு அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புவர். இதை பற்றி உங்கள் பிள்ளை உங்களிடம் ஆலோசிக்கலாம். ஏனனில், தங்களை தங்கள் அடையாளத்தின் படி அழைக்காவிடில், அவர்களுக்கு மனஉளைச்சலும் ஏமாற்றமும் ஏற்படலாம்.

ஒருவரின் பாலின வெளிப்பாட்டை மாற்றுதல்

ஒரு ட்ரான்ஸ்ஜெண்டெர் நபருக்கு தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்தால், அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும். அவர்கள் வழியில் ஆடை அணிகலன்கள் அணிவதன் மூலம் தம் அடையாளத்தை வெளி உலகிற்கு காட்டமுடிகிறது. 

பொதுவாக, வளரும் குழந்தைகள், தங்கள் பெற்றோர்கள் தேர்ந்தெடுக்கும் ஆடை வகைகளையே அணிவதுண்டு. இளமை காலங்களில், தமக்கு இந்த ஆடைதான் வேண்டும் என்று சொல்ல தயங்குவதுண்டு. அதேபோல், வெளி உலகத்திலும் தமக்கு சரி என்று தோன்றும் பாணியில் ஆடை அணிய தயங்குவதுண்டு. இவர்கள் முதலில் வீட்டில், தங்களுக்கு ஏற்ற ஆடை அணிந்து பழகலாம். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்.

சட்ட ரீதியான மாற்றம் 

உங்கள் பெயரை சட்டப்பூர்வமாக மாற்றுதல்

சிங்கப்பூரை பொறுத்தவரை, பெயர் மாற்றம் மிக எளிதில் செய்துவிடலாம். இணையம் வழி, பெயர் மாற்று படிவத்தை பூர்த்தி செய்து, வழக்கறிஞர் ஒருவரால் ஒப்புதல் செய்யபட்டால் போதும். 

விண்ணப்பிக்கும் நபர் 21 வயதுக்கும் குறைவாக இருந்தால், பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும். Deed Poll எனப்படும் இப்படிவம், பிறகு அடையாள அட்டை மற்றும் கடவுசீட்டு போன்றவை விண்ணப்பிக்க தேவைப்படும். 

பெயர் மாற்றம் என்பது ஒரு முக்கிய முடிவாகும். பின்னாளில், அந்த பெயர்தான் நிலைத்திருக்கும். பெற்றோர்கள் இதில் குழப்பம் அடையலாம். பொதுவாக, பெயர் பொருத்தம், பூசாரி, மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆலோசனைப்படி, புது பெயர் தேர்ந்தெடுக்கலாம்.

நம்மில் பலர், நம் குழந்தைகளுக்கு நடுநிலை பெயர் தேர்ந்தெடுப்பதுண்டு. இருப்பினும் உங்கள் பிள்ளை புது அடையாளம் காணும் தருணம், தமக்கு பொருத்தமான பெயர் வைத்துக்கொள்ள விரும்பலாம். இது போன்று தருணத்தில், உங்கள் பிள்ளைக்கு பொருத்தமான பெயர் தேர்ந்தெடுக்க நீங்களும் உதவலாம்!

சட்டப்பூர்வ பாலின மார்க்கரில் மாற்றம்

சட்டப்பூர்வ மாற்றம், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எளிதில் கிடைப்பதில்லை. இதனாலேயே, மாற விரும்பம் நபர்கள், பல காலம் காத்திருந்தும், கடைசியில் சட்டப்பூர்வ தேவைகளை பூர்த்தி செய்வதற்குள், மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள். சில நாடுகளில் மனநல மருத்துவரிடமோ அல்லது சுய பிரகடனம் செய்தாலோ, எளிதில் சட்டபூர்வ மாற்றம் கிடைத்துவிடும். ஆனால் சிங்கப்பூரில் ஒரு நபருக்கு சட்டப்பூர்வமாக பாலின மார்க்கேர்ஸ் மாற்றும் முன், அவரை பல மருத்துவ நிபுணர்கள் பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர், மேலும் செக்ஸ் மாற்று சிகிச்சையில் பங்கெடுக்கும் அணைத்து நிபுணர்களும், மாற்றத்தை கோரும் நபரை பரிசோதித்து, ஆவணங்கள் சமர்ப்பிக்கவேண்டும்.

மருத்துவ மாற்றம்

ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT)

இரண்டு காரணங்களுக்காக ஒருவரின் மருத்துவ மாற்றத்திற்கான முதல் படியாக ஹோர்மோன் மாற்று சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது:

  1. பருவமடைதல், அதோடு வரும் உடல் மாற்றம்

  2. இதில் ஓரளவு பின்வாங்க வாய்ப்பு உண்டு. 

ஹோர்மோன் சுரப்பிகள் உடலில் இருந்தால், ஹோர்மோன் சிகிச்சையை நிறுத்திவிடலாம். அப்படி இல்லாத பட்சத்தில், வாழ் நாள் முழுவதும் மாத்திரைகள் சாப்பிடவேண்டும்.

ஹோர்மோன் மாற்று சிகிச்சை பெற விளைவோர், முதலில் மனநல மருத்துவர் ஒருவரிடம் பரிந்துரை பெற்று கொள்ளவேண்டும். அதை கொண்டு, மருத்துவமனைகளில் உட்சுரப்பியல் நிபுணர்களிடம் ஹோர்மோன் சிகிச்சை பெறலாம். உங்கள் பிள்ளைக்கு தேவையான ஹோர்மோன் மாத்திரை அளவை அவர் பரிந்துரைப்பார். பொதுவாக, ரத்த பரிசோதனை செய்த பிறகு, சிகிச்சை ஆரம்பமாகும். முதல் வருடம் மூன்று முறைகளும், பின்வரும் காளங்கிளில் வருடம் ஒரு முறையும் செய்யப்படும்.

ஆண் பாலினமாக உணர்ந்து, மாற விரும்புவோர்க்கு, சிகிச்சையின் போது, டெஸ்டோஸ்டிரோன் ஹோர்மோன் (ஆண் தன்மை பெற), ஊசி மூலம் வழங்கப்படுகிறது. அன்றாடம் உடலில் தைலம் போன்றவற்றை பயன்படுத்தும் முறைகளும் உண்டு (தையிலம் தற்போது சிங்கப்பூரில் கிடைப்பதில்லை).

பெண்களாக மாற விரும்புவோர்க்கு, ஈஸ்ட்ரோஜன் மாத்திரைகள் வடிவில் வழங்கப்படுகிறது. சில வேளைகளில், ஊசி மூலமும் வழங்கப்படும்.

இவ்வகையான ஹோர்மோன் சிகிச்சை பெருவோர், பொதுவாக பருவமடையும் ஒரு பெண்ணோ ஆணோ உணரும் மாற்றங்களை உணர்வர்.

மாற்றங்களின் வகைகள் (டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சிகிச்சை)

உடல் மாற்றங்கள்

  • தோல் தடித்தல்

  • அதிகரித்த துளை அளவு, அதிக எண்ணெய் உற்பத்திக்கு வழிவகுக்கிறது

  • வியர்வை மற்றும் சிறுநீரின் வாசனையின் மாற்றம்

  • அதிகரித்த வியர்வை

  • முகப்பரு

  • மார்பு அளவு சாத்தியமான குறைவு

  • அதிக ஆண் வடிவங்களுக்கு கொழுப்பை மறுபகிர்வு செய்தல்

  • வயிற்றைச் சுற்றி அதிக கொழுப்பு

  • முகம், இடுப்பு மற்றும் தொடைகளை சுற்றி குறைந்த கொழுப்பு

  • தசை வெகுஜன அதிகரிப்பு மற்றும் வரையறை

  • அதிக வளர்சிதை மாற்ற விகிதம்

  • குரல் வளையங்களின் தடித்தல், குரல் ஆழமடைவதற்கு வழிவகுக்கிறது

  • உடல் மற்றும் முக முடி வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்

  • ஆண் முறை வழுக்கை

  • முக முடி வளர்ச்சி

உணர்ச்சி மாற்றங்கள்

  • உணர்ச்சி போராட்டம்

பாலியல் மாற்றங்கள்

  • சாத்தியமான:

    • லிபிடோ அதிகரிப்பு

    • யார், எது உங்களுக்கு பாலியல் இன்பம் தருகிறது என்பதில் மாற்றம்

    • பிறப்புறுப்புகளின் அளவு அதிகரிப்பு

இனப்பெருக்க மாற்றங்கள்

  • மாதவிடாய் நிறுத்தம் - நபரைப் பொறுத்து, மாதவிடாய்கள் இலகுவாகவும், குறுகியதாகவும், மேலும் இடைவெளி அதிகமாகவும், அல்லது கனமாகவும், நீளமாகவும் இருக்கலாம்

  • கர்ப்பம் தரிப்பதற்கான திறன் குறைக்கப்பட்டது ஆனால் அகற்றப்படவில்லை

———

மாற்றங்களின் வகைகள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிகிச்சை

உடல் மாற்றங்கள்

  • மெல்லிய தோல்

  • துளை அளவு குறைகிறது, இது குறைந்த எண்ணெய் உற்பத்திக்கு வழிவகுக்கிறது

  • வியர்வை மற்றும் சிறுநீரின் வாசனையின் மாற்றம்

  • படிப்படியான மார்பக வளர்ச்சி( நபருக்கு நபர் அளவு மற்றும் வடிவம் மாறுபடும்)

  • அதிக பெண் வடிவங்களுக்கு கொழுப்பை மறுபகிர்வு செய்தல் (இடுப்பு மற்றும் தொடைகளைச் சுற்றி அதிக கொழுப்பு)

  • தசை வெகுஜன மற்றும் தசை வரையறை குறைக்கப்பட்டது

  • முகம் மற்றும் உடல் முடிகளில் தடிமன் மற்றும் வளர்ச்சி விகிதம் குறைகிறது

  • உச்சந்தலையில் முடி மீண்டும் வளரக்கூடிய சாத்தியம்

உணர்ச்சி மாற்றங்கள்

  • உணர்ச்சி போராட்டம்

பாலியல் மாற்றங்கள்

  • விறைப்புத்தன்மை குறைதல்

  • விந்து வெளியேறும் அளவு மாற்றம் (சிறிது முதல் இறுதியில் எதுவுமில்லை)

  • உங்களுக்கு பாலியல் இன்பம் தருவதில் சாத்தியமான மாற்றம்

  • விரைகளின் அளவு குறைதல் (அசல் அளவின் பாதி அளவு)

இனப்பெருக்க மாற்றங்கள்

  • விந்தணுக்களின் எண்ணிக்கையில் படிப்படியாகக் குறைவு (விந்தணுவை உற்பத்தி செய்யும் திறனை நிரந்தரமாக இழக்க நேரிடும்)

பாலினத்தை உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சை / அறுவை சிகிச்சைகள்

அறுவை சிகிச்சை, மாற விரும்புவோர் எதிர்நோக்கக்கூடியது. சிலர் ஆரம்ப நிலையிலேயே அறுவை சிகிச்சை செய்து கொள்வதுண்டு. தீவிரம் அல்லாத அறுவை சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. பொதுவாக தீவிர சிகிச்சைகளுக்கு காத்திருப்போர், தங்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் உணர்வு சார்ந்த மாற்றங்களை எப்படி சமாளிக்கிறார்கள் என்று புரிந்துகொண்ட பிறகே மாற்றுப்பு அறிவை சிகிச்சைக்கு தயார் ஆகுகிறார்கள். அறுவை சிகிச்சையில் இரண்டு வகை படும். ஒப்பனை சார்ந்த அறுவை சிகிச்சை, மற்றும் உடல் உறுப்பை அகற்றிவிட்டு, புனரமைப்பு செய்வது.

'ஒப்பனை' நடைமுறைகள்

ஆணாக விழையும் ஒருவற்கு, ஒப்பனை நடைமுறையின் போது, மார்பக தசைகள் அகற்ற படுகின்றன. இதற்கு பிறகு, மார்பக பகுதி ஆண்களை போல் காணப்படும்.  இது போன்ற சிகிச்சைகளுக்கு, ஹோர்மோன் மாத்திரைகள் உட்கொள்ள தேவையில்லை.

பெண்களை போல் உணரும் ஒருவர்க்கு, அதிகமான சிகிச்சைகள் தேவைப்படலாம். உடல் ரோமங்கள் அகற்றப்படுகின்றன. இது லேசர் மூலம் செய்யப்படலாம். மார்பகம் உருவாக செய்வது, இது மட்டும் இன்றி, முகப்பொலிவு பெற சில நுண்ணியமான சிகிச்சைகளும் உண்டு. 

ட்ரான்ஸ்ஜெண்டெர் நபர்கள் சிலருக்கு  அவர்கள் வாழும் முறை திருப்தி அளிக்கலாம். ஆனால், சிலருக்கு, விரக்தியும், வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. இது போன்றவர்கள், முழுமையான மாற்று சிகிச்சையை தேர்ந்தெடுக்கலாம்.

அகற்றுவது / புனரமைப்பு செய்வது

அகற்றுவது / புனரமைத்து என்றால் என்ன? ஒருவற்கு அறுவை சிகிச்சையின் போது மறும உறுப்பு / மகப்பேறு உறுப்புகள் அகற்றப்பெற்றும் மறு புனரமைக்கப்படுவதும் ஆகும். எப்படி இருப்பினும், ஒருவர் ஒரு வருடமேனும் ஹோர்மோன் மாத்திரைகள் உட்கொண்டிருக்க வேண்டும்.

ஆண்மையுடையது

அகற்றுதல்

  • கருப்பை நீக்கம் (Hysterectomy): அறுவை சிகிச்சை மூலம் கருப்பையை அகற்றுதல்

  • கருப்பை நீக்கம் (Oophorectomy): கருமுட்டைகள் அகற்றுவது

புனரமைப்பு

  • மெட்டோடியோபிளாஸ்டி(Metoidioplasty): பெண் உறுப்பில் காணப்படும் தசையை பயன்படுத்தி, ஆண் மர்மஉறுப்பு தயார் செய்வது

  • ஃபாலோபிளாஸ்டி(Phalloplasty): ஆண்குறி மற்றும் நீண்ட சிறுநீர்க்குழாயை உருவாக்க முன்கை அல்லது தொடையில்  காணப்படும் தசையை பயன்படுத்துவது

———

டிரான்ஸ்ஃபெமினைன்

அகற்றுதல்

  • ஆர்க்கியெக்டோமி (Orchiectomy): விரைகள் நீக்கம்

புனரமைப்பு

  • வல்வோபிளாஸ்டி (Vulvoplasty): தற்போதுள்ள தோல் மற்றும் திசுக்களைப் பயன்படுத்தி யோனி கால்வாயைத் தவிர யோனியின் அனைத்து பகுதிகளையும் புனரமைத்தல்

  • வஜினோபிளாஸ்டி (Vaginoplasty): தற்போதுள்ள தோல் மற்றும் திசுக்களைப் பயன்படுத்தி யோனி கால்வாயின் மறுசீரமைப்பு

சில பெற்றோர்கள் இது போன்ற சிகிச்சைகளை எளிதில் புரிந்து கொள்வதில்லை. தங்கள் பிள்ளை இதுபோன்ற மறுசீரமைப்பு அறுவைசிகிச்சைக்கு தயாராக உள்ளதா என்ற ஐயம் இருந்து கொண்டே இருக்கும்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும், ஒவ்வொருவருக்கும் ஒரு தனி தன்மை உண்டு. அதன் படியே அவர்கள் பயணம் தொடரும்.

… மாறுவதால் ஆபத்துகள் அதிகமாக உள்ளதா?

சமூகத்துடன் ஒன்றிணைய விளையும் ஒரு திருநங்கையோ / திருநம்பியோ எதிர்நோக்கும் சவால்கள் பல.  புறக்கணிக்க படுவது, சமுதாய பாகுபாடுக்கு ஆளாகுவது, ஒதுக்கிவைக்கப்படுவது  போன்ற வற்றால், அவர்கள்  கடுமையாக பாதிக்கப்படலாம். 

சமூக ரீதியாக அடையும் பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, மருத்துவ ரீதியாக ஒருவர்க்கு அபாயங்களும் உள்ளன.

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சிகிச்சையின் அபாயங்கள்

  • அதிக சாத்தியமாகும் விளைவுகள்:

    • நீரிழிவு நோய்

    • உடல் பருமன்

    • இரத்த அணுக்கள் தடித்து வரும்போது, உடலில் (ஹீமோகிரிட் அளவுகள் அதிகரிக்க கூடும்)

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிகிச்சையின் அபாயங்கள்

  • சாத்தியமான (ஆனால் குறைந்த) உயர்ந்த ஆபத்து:

    • இரத்தக் கட்டிகள்

    • மாரடைப்பு

    • பக்கவாதம்

    • நீரிழிவு நோய்

    • புற்றுநோய்

மேல் காணும் பிரச்சனைகள் பெரும் அளவிலோ அல்லது சிறு அளவிலோ வர சாத்தியம் இருக்கிறது.  இருப்பினும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மருத்துவ சிகிச்சையின் போது ஏற்படும் மனஉளைச்சல் போன்றவற்றை சமாளிக்க உதவும்.  

… சிங்கப்பூரில் திருநங்கைகள் திருநம்பி எதிர்கொள்ளும் சவால்கள்?

நல்ல கேள்விதான். எந்த பெற்றோரும் தம் பிள்ளை, சமுதாயத்தில் ஒடுக்கப்படுவதை விரும்பமாட்டார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பைவிட, இன்றைய நாளில், எவ்வளவோ புரிந்துணர்வும் / சகிப்புத்தன்மையும் கூடியுள்ளது. சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளில் இது போன்றவர்களை ஆதரிக்க என்னும் முயற்சிகள் எடுக்கப்படலாம்.

மனித உரிமையும், சமூக உரிமையும் இல்லை என்றே சொல்லவேண்டும்.

ட்ரான்ஸ்ஜெண்டெர் போன்றோருக்கு தன்னிகரில்லாத மருத்துவ சேவை பராமரிப்பு இன்னும் குறைவாகவே உள்ளது.

பாலினத்தை உறுதி செய்யும் முறைகளில், வஜினோபிளாஸ்ட்டி, எனும் முறை சிங்கப்பூரில் மிகவும் பிரபலமாக இருந்தது. இதை தொடங்கியவர் நமது முன்னாள் அதிபர் மாண்புமிகு திரு பெஞ்சமின் சியர்ஸ் ஆவார். இதை நம்முள் பலர் அறிந்திருக்கலாம். இன்றளவும் , பிறப்புறுப்பு குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த உத்தி கையாளப்படுகிறது.

இப்போதெல்லாம், இதுபோன்ற சேவைகள் எளிதில் கிடைப்பதில்லை. பாலின மாற்று சிகிச்சை பெற ஒருவர் முதலில் செக்ஸ்  அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை அணுகவேண்டும்.  பொது மருந்தகங்கள்/ தனியார் மருந்தகங்கள்  இதுபோன்றோருக்கு தேவையான உதவிகளை செய்ய தயங்குகின்றன. இது போன்ற காரணங்களால், ட்ரான்ஸ்ஜெண்டெர்ஸ் வகையினர் பல வகையிலும் பாதிகப்படுகின்றனர்.

பாலின அடையாளத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அடைவதில் சிரமம்

சிங்கப்பூர், ட்ரான்ஸ்ஜெண்டெர் நபர்களுக்கு அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் என்ஆர்ஐசி போன்ற தேசிய அடையாள ஆவணங்களில் அவர்களின் பாலினத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதை கடினமாக்கியுள்ளது.

சிங்கப்பூரில் இப்பொது குடிநுழைவு சோதனை சாவடி ஆணையம்  சட்டத்தின் படி, பிறப்புறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டால் மட்டும் போதாது. அவர்களை, மகப்பேறு மருத்துவரோ, சிறுநீரக நிபுணரோ அல்லது மாற்று உறுப்பு நிபுணர் யாராவது பரிசோதிக்க வேண்டும். அதன் பிறகே , ட்ரான்ஸ்ஜெண்டெர் வகையினர், தங்கள் கடவு சீட்டில் , பாலின மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம்.  

இதற்கிடையில், பல ட்ரான்ஸ்ஜெண்டெர் நபர்கள் தங்கள் பாலின அடையாளத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் தங்கள் பெயர்களுக்கு முன்பு சரியான வணக்கத்தை தேர்ந்துஎடுக்க விரும்புகிறார்கள் (எ.கா. விமான டிக்கெட்டுகள், இ-காமர்ஸ் இணையதளங்கள், பல்கலைக்கழக பயன்பாடுகள் போன்றவை). இருப்பினும், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற சில நிறுவனங்கள், ட்ரான்ஸ்ஜெண்டெர் நபர்கள் தங்கள்பாலின அடையாளத்தை உறுதிப்படுத்தும் வணக்கத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதிப்பதில்லை. மருவிண்ணப்பங்களை இவர்கள் ஏற்பதில்லை.

சமூக களங்கம்

குடும்பம் 

சிங்கப்பூரில், குடும்ப பிணைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தைகளுடன் நல்ல உறவு கொண்டிருக்க வேண்டும். அவர்களை நம்ப வேண்டும். சில குடும்பங்களில், ட்ரான்ஸ்ஜெண்டெர் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதும் உண்டு. குடும்ப ஆதரவும் இன்றி / கையில் பணம் இல்லாமல் பல இன்னல்களை இவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது

ட்ரான்ஸ்ஜெண்டெர் நபர்களிடம் அன்பு செலுத்தாமல், அவர்களை உதாசீனப்படுத்துவதால், அவர்களுக்கு மேலும் மனஉளைச்சலை உண்டாக்குகிறோம். சில குடும்பங்களில் இவர்களை அடித்து துன்புறுத்தவும் செய்கிறார்கள்.

சமுதாயம்

ட்ரான்ஸ்ஜெண்டெர் நபர்கள், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள், வேலை இடங்கள் என பல இடங்களிலும் பல வகையான ஆபத்துகளையும் சவால்களையும் எதிர்நோக்குகிறார்கள். கழிவறை பயன்படுத்தும் போது கூட, பிரச்சனைகள் வருவதுண்டு.

நமது பள்ளிக்கூடங்கலில் கூட, ட்ரான்ஸ்ஜெண்டெர் பிள்ளைகள் பிற மாணவர்கள் கொடுக்கும் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். நமது பாட திட்டத்தில், ட்ரான்ஸ்ஜெண்டெர் பிள்ளைகள் பற்றி எதுவும் கற்பிக்க படுவதில்லை. அதனாலேயே, நமது ஆசிரியர்களுக்கும் தகுந்த விழிப்புணர்வு இல்லாமல் போய்விடுகிறது.

  • 77.6% ட்ரான்ஸ்ஜெண்டெர்மாணவர்கள் பள்ளியில் கொடுமைப்படுத்துதல் முதல் பாலியல்தொல்லை வரை எதிர்மறையான அனுபவங்கள் பற்றி புகார் செய்வதுண்டு

  • மூன்றில் ஒரு பங்கிற்கும்  குறைவானவர்கள்  மட்டும் பள்ளியில் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று கூறியுள்ளனர்

  • 24% பேர் மட்டுமே பள்ளியில் உதவி கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

பள்ளி நாட்களுக்கு பிறகு, வேலை உலகம் நாடி வரும் டான்ஸஜேந்தர் நபர்களுக்கு, பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. TAFEP ஊழியர் உரிமை, பாலின பாகுபாடு, போன்ற வழிவகைகள் நடைமுறையில் இருக்கின்றன, ஆயினும் இவை, பாலின மாற்றம் பெற்றவர்கலின் வேலை உரிமை, மற்றும் பிற பாலின அடையாளத்தை அனுசரிப்பதாக இல்லை. அதே சமயம் பன்னாட்டு நிறுவங்கள் தங்கள் நிறுவனத்தில் வேலை புரியும் LGBTQ+ ஊழியர்களுக்கு தகுந்த வெள்ளையிட கோட்பாடுகளை நிலைநிறுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, நாங்கள் கொடுத்துள்ள தகவல்கள் உங்களுக்கு குழப்பத்தை கொடுக்கலாம். சில நேரங்களில், பயத்தையும் கொடுக்கலாம். ஆனால், இவை யாவும், உங்கள் பிள்ளை நிஜ வாழ்க்கையில் எதிர்நோக்கவிற்கும் உண்மையான சவால்கள். அதனால், உங்கள் பிள்ளைக்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் கொடுங்கள்.

குறிப்புகள்:

பாலின டிஸ்ஃபோரியா மற்றும் செக்ஸ் ஹார்மோன் சிக்னலிங் இடையே மரபணு இணைப்பு. (2019). https://academic.oup.com/jcem/article/104/2/390/5104458  

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிகிச்சை பற்றிய தகவல் | திருநங்கைகள் பராமரிப்பு. (2020). https://transcare.ucsf.edu/article/information-estrogen-hormone-therapy

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சிகிச்சை பற்றிய தகவல்கள் | திருநங்கைகள் பராமரிப்பு. (2020). https://transcare.ucsf.edu/article/information-testosterone-hormone-therapy 

திருநங்கைகளுக்கான பாலினத்தை உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சைகள் பற்றி கற்றல். https://myhealth.alberta.ca/health/AfterCareInformation/pages/conditions.aspx?HwId=ack1544  

திருநங்கைகளுக்கான பாலினத்தை உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சைகள் பற்றி கற்றல். https://myhealth.alberta.ca/health/AfterCareInformation/pages/conditions.aspx?hwid=acj3107  

மெட்டோயிடியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை: எப்படி தயார்படுத்துவது,
அறுவை சிகிச்சைக்கு பின் பராமரிப்பு, என்ன எதிர்பார்க்கலாம். https://healthcare.utah.edu/transgender-health/gender-affirmation-surgery/metoidioplasty.php

ஃபாலோபிளாஸ்டி கையேடு: எப்படி தயார்படுத்துவது, அறுவை சிகிச்சைக்கு பின் பராமரிப்பு, என்ன எதிர்பார்க்கலாம். https://healthcare.utah.edu/transgender-health/gender-affirmation-surgery/phalloplasty-recovery.php 

பாலின அடையாளம் மற்றும் பாலியல் நோக்குநிலை தொடர்பாக மனித மூளையின் பாலின வேறுபாடு. (2009). https://pubmed.ncbi.nlm.nih.gov/19403051/

ஆண் பிறப்புறுப்பிலிருந்து, பெண்ணின் பிறப்புறுப்பாக மாற்றி புனரமைப்பது. https://healthcare.utah.edu/transgender-health/gender-affirmation-surgery/vaginoplasty.php    

திருநங்கைகள்/ திருநம்பிகள் பற்றி பன்னாட்டு கூட்டு அறிக்கை. (2021). https://transgendersg.com/universal-periodic-review-a-joint-report-on-transgender-issues/

ட்ரான்ஸ்பேஸுஅலிசம் என்றால் என்ன? http://www.cakeworld.info/transsexualism/what-causes  


எப்பொழுது…

…எப்போது , குழந்தைகள் தங்கள் பாலினத்தை உணருகிறார்கள்?

குழந்தைகள் 3 வயதிலிருந்தே பாலின அடையாளம் பற்றிய கருத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள், மேலும் "நீ ஒரு பெண்ணா அல்லது ஆணா" போன்ற கேள்விகளைக் கேட்டவுடன், விரைவில் தங்களை வகைப்படுத்த தொடங்குகிறார்கள்.

எல்லா பிள்ளைகள் போலவே ட்ரான்ஸ்ஜெண்டெர் குழந்தைகளும் தக்க வயதில் பாலின அடையாளத்தை புரிந்துகொள்கின்றனர். இருப்பினும், ஒரு சிறு குழப்பத்துடன் தென்படுகிறார்கள். பிறப்பில் தமக்கு கொடுக்கப்பட்ட அடையாளம் வேறு, தான் புரிந்துகொள்ளும் அடையாளம் வேறு. சிறு வயதில், இவர்கள் தங்கள் உணர்வுகளை பற்றி சொன்னாலும் அதை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.

பாலின குழப்பம் அடையும் எல்லா குழந்தைகளும் எதிர்காலத்தில் ட்ரான்ஸ்ஜெண்டேராக மாறவேண்டும் என்ற அவசியம் இல்லை. பருவமடையும் பொது, மேலும் வித்யாசமாக உணரலாம். பருவமடைந்த பிறகு வரும் உணர்வுகளே நிலையானவை.

… என் குழந்தை மாற வேண்டுமா?

முன்பு குறிப்பிட்டது போல, ஒவ்வொரு டிரான்ஸ் நபரின் பயணமும் வேறுபட்டது; குறிப்பிட்ட வயதில்தான் தங்கள் குழந்தை மாறவேண்டும் என்ற விதி இல்லை. ஆயினும், மருத்துவ சட்டத்தின் கீழ், ஹோர்மோன் தெரபி, ஆரம்பிக்க ஒருவர் 16-17 வயதுடையவராக இருக்கவேண்டும். 

இது பருவமடைந்திருக்கும் வயது.

சமுதாயத்தில் ஒன்றினையும் உங்கள் பிள்ளைக்கு, உங்கள் ஆதரவு தேவை. மாற்றத்தை எதிர்நோக்கும் உங்கள் பிள்ளை, பல கேள்விகளுடன் ஆராய்ந்துபார்க்க விரும்புகிறதா? பெயர் மாற்றம் போன்று பல முடிவுகளை உங்கள் பிள்ளை எடுக்கவில்லை என்றால், அவர்களுடன் கலந்து பேசுங்கள். உங்கள் பிள்ளைக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டறியுங்கள். பெயர் மாற்றம் செய்வது பெரிதல்ல. யார் வேண்டுமானாலும் பெயர் மாற்றி கொள்ளலாம். புது பெயரை சொல்லி கூப்பிடும்போது, அது தானே பழகிவிடும். உங்கள் குழந்தைக்கும் அப்படிதான்.

உங்கள் பிள்ளை தனது பாலினக் குறிப்பான் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பது போலல்லாமல், சட்டப்பூர்வமாக மாற நினைத்தால், எப்போது வேண்டுமானாலும் இதைச் செய்யலாம், ஏனெனில் சட்டப்பூர்வ பெயர் மாற்றத்திற்கான பத்திர வாக்கெடுப்பைப் பெறுவதில் சிரமம் இல்லை. சிங்கப்பூரில், உங்கள் பெயரை எத்தனை முறை வேண்டுமானாலும் சட்டப்பூர்வமாக மாற்றலாம் என்பதற்கு வரம்புகள் எதுவும் இல்லை, ஆனால் உங்கள் பிள்ளை அவர்கள் தேர்ந்தெடுத்த பெயரேயே நிரந்தரமாக்கிக்கொள்ளவேண்டும், எதிர் வரும் காலத்தில் அப்பெயரையே பயன்படுத்தவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் பிள்ளை மருத்துவ ரீதியாக மாறுவதைப் பற்றி நினைத்தால், முதலில், மனநல மருத்துவரிடம், உங்கள் பிள்ளைக்கு ஏற்பட்டுள்ள பாலின அதிருப்தி பற்றி தெளிவுபெற வேண்டும். பொதுவாக இந்த தருணத்தில் பெற்றோர்களுக்கு அதிக குழப்பங்கள் எழக்கூடும். ஏன்னெனில், உங்கள் பிள்ளை எதிர்நோக்கும் மாற்றங்கள் பல நிரந்தரமானவை.

உங்கள் பிள்ளை சிறு பிள்ளையாக இருந்தாலோ, அல்லது பருவமடையும் வயதில் இருந்தாலோ, பருவமடைவதை தடுக்கும் தடுப்பான்கள் உள்ளன (சிங்கப்பூரில் இது கிடைப்பது கடினம்). இத்தடுப்பான்கள், உங்கள் பிள்ளைக்கு ஏற்பற்றிக்கும் அதிருப்தி நிலையை சிறு வயதிலேயே தணிக்க உதவும். இவ்வகை தடுப்பான்கள் நிரந்தரமான மாற்றங்களை அளிப்பதில்லை. தடுப்பான்கள் நிறுத்தப்படும்போது,உங்கள் பிள்ளை பழைய நிலைக்கு வந்துவிடும்.

உங்கள் பிள்ளை பருவம் எய்திய வயதாக இருந்தால், எதிர் நேட்டல் பாலினத்தின் பருவமடைதல் மாற்றங்களைத் தூண்டுவதற்கு, ஹோர்மோன் சிகிச்சை உதவும். மேலும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகழும் உண்டு. உடல் மாற்றங்களுக்கு, ஹோர்மோன் சிகிச்சையை மட்டும் சார்ந்திருக்க தேவையில்லை.

உங்கள் பிள்ளையிடம் இது குறித்து பேசும் நேரமிது. தன்னுள் மாற்றத்தை உணர்ந்த உங்கள் பிள்ளை, அந்த பயணத்துக்கு தயாரா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மனதளவில் உங்கள் பிள்ளை தயார் நிலையில் உள்ளதா? உடல் ரீதியாக தான் பெறப்போகும் மாற்றங்கள், அதன் பிறகு இந்த சமுதாயம் உங்கள் பிள்ளையை எப்படி கண்ணோட்டம் இடப்போகிறது? முன்பு நாங்கள் கூறியதுபோல், பாலின அதிருப்தி உள்ளவர்கள் எல்லோரும் மருத்தவ ரீதியாக மாற விழைவதில்லை. ஹோர்மோன் மாத்திரைகள் உட்கொள்ளும் முறையை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம். அப்படி இல்லையென்றாலும் அதை மறுப்பதிற்கில்லை.

இதன் பொருட்டு, உங்கள் பிள்ளை மேற்படி மாற்றத்தை ஏற்க தயாரா என்பதை அவர்களே முடிவெடுப்பது நல்லது. தக்க வயதில், சூழ்நிலைக்கேற்ப, அவர்கள் அந்த முடிவை எடுக்கலாம்.

சிலர் சமூக ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் மாறுவதில் திருப்தியடைவார்கள், அல்லது ஓரளவுக்கு கூட அவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் தங்கள் பாலினத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும்.

குறிப்புகள்:

குழந்தைகளில் பாலின அடையாள வளர்ச்சி. https://www.healthychildren.org/English/ages-stages/gradeschool/Pages/Gender-Identity-and-Gender-Confusion-In-Children.aspx


எப்படி…

… நான் இதை சமாளிக்க முடியுமா?

பெற்றோர்கள் என்ற முறையில், உங்கள் பிள்ளை வாழ்வில் செய்யும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கும். பெற்றோர்கள் பலர் அவர் தம் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, தங்கள் பிள்ளையை இழந்தது போல் உணர்ந்தனர். ஏனனில், தாங்கள் எதிர்பார்த்தது போல் அப்பிள்ளை இல்லை. நீங்களும் உங்கள் பிள்ளையின் பாலின அடையாளத்தை ஏற்க மறுப்பதுபோல் தோன்றலாம்.

இதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை எங்களால் சரியாகச் சொல்ல முடியாது, ஏனென்றால் அவ்வாறு செய்வதற்கு சரியான வழி எதுவும் இல்லை. இருப்பினும், இந்தப் பயணத்தில் உங்களுக்கு உதவக்கூடிய சில விஷயங்கள் உள்ளன.

உங்கள் பிள்ளைமேல் உங்களுக்கு இருக்கும் அன்பு ஆழமானது என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் அன்பை, பல வழிகளில் பகிர்ந்துகொள்ளலாம். முடியும்போதெல்லாம், வார இறுதி நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். ஒன்று சேர்ந்து சமையல் செய்வது அல்லது தொலைக்காட்சி பார்ப்பது போன்றவை செய்யும்போது, உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் இருக்கும் அன்பு வலுப்படும். தன்னை தம் பெற்றோர் வெறுக்கவில்லை என்பதை உங்கள் பிள்ளை உணர்ந்துகொள்ளும். உங்களுக்கும், உங்கள் பிள்ளையின் பாலின வேறுபாடு ஒரு பொருட்டாக இருக்காது.       

நீங்கள் நம்பும் ஒருவரிடம் பேசுங்கள். அது உங்கள் மனைவி/துணை அல்லது நெருங்கிய நண்பராக இருக்கலாம். அவர்களால் உங்கள் கவலைக்கு உடனே தீர்வு கிடைக்காவிட்டாலும், உங்கள் மனம் சஞ்சலம் அடையும்போது தோல் கொடுக்கும் ஒரு துணையாக அவர்கள் இருக்கலாம்.

நிபுணத்துவ உதவியை நாடுங்கள். இது போன்ற அனுபவம் உங்களுக்கு முதல் முறையா? உங்கள் கேள்விகளுக்கு மனநல நிபுணரை நாடலாம். உடல் நலமில்லை என்றால், நாம் எப்படி ஒரு மருத்துவரை நாடுவோமோ, அதுபோல.

… என் குழந்தையின் பாலின அடையாளத்தைப் பற்றி நான் அவர்களிடம் பேசலாமா?

பொதுவாக ஏமாற்றமும், கோபமும் சேர்ந்து இருக்கும் ஒரு சூழ்நிலையில், உங்கள் பிள்ளைக்கு என்ன நடக்கப்போகிறது அல்லது எப்படி இருக்கும் போன்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பது சற்று கடினமே.

மீண்டும், உங்கள் குழந்தையுடன் உரையாடுவதற்கான நிலையான வழி எதுவும் இல்லை, ஏனெனில் ஒவ்வொரு குடும்ப சூழலும் வேறுபட்டது. ஒவ்வொரு பெற்றோர் குழந்தைகள் உறவும் வேறுபட்டது. இதில் மிக முக்கியம், உங்கள் பிள்ளை உங்களை நம்ப வேண்டும்.

பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தைகளிடம் இது குறித்து முதலில் பேசுவோமானால், அவர்களுக்கு நம்மிடம் ஒரு நம்பிக்கை உண்டாகும். கோபத்தை முன்வைக்காமல், அவர்களை அணுகினால் பலன் கிடைக்கும். உங்கள் முயற்சியை அவர்களும் புரிந்துகொள்வார்கள். இரண்டு புறமும் பாராபட்சம், ஒளிவு மறைவு இல்லாமல் பேசும்போது பலன் பல மடங்காகும்.

… என் குழந்தையின் பயணத்தில் நானும் சேர்ந்து பயணிக்கலாமா?

உங்கள் ட்ரான்ஸ் பிள்ளைக்கு, நீங்கள் பல வழிகளில் உங்கள் ஆதரவை காட்டலாம். அன்றாட வாழ்க்கையில், சிறு சிறு வழிகளில் அவர்களுக்கு  அன்பையும் ஆதரவையும்  காட்டலாம். நீங்கள் பிங்க் டாட் போன்ற அமைப்புகளில் சேர தேவையில்லை. எளிய முறைகளை, நாங்கள் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்:

அவர்களுடன் மட்டும் இல்லாமல் அனைத்து உரையாடல்களிலும் அவர்கள் தேர்ந்தெடுத்தபெயர் மற்றும் பிரதிப்பெயரே பயன்படுத்தவும். முதலில் யாருக்கும் கடினமாகத்தான் இருக்கும். கால போக்கில் பழகிவிடும். இது போன்ற சிறு சிறு செய்கைகள், உங்கள் பிள்ளைக்கு தன்னம்பிக்கை அளிக்கும்.

அவர்களின் அடையாளத்தை ஆராய்ந்து வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். இது அவர்களின் டிஸ்ஃபோரியாவைத் தூண்டும் செயல்களை நிறுத்த அனுமதிப்பது போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியிருக்கலாம் (எ.கா. பாய்ஸ் பிரிகேட், கேர்ள் கைட்ஸ் போன்ற பாலின CCA களில் இருந்து வெளியேறுதல்), அவர்களை வித்தியாசமாக உடை அணிய அனுமதிப்பது அல்லது அவர்களின் பாலின அடையாளத்தை உறுதிப்படுத்தும் புதிய பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களை ஆராய்வது போன்றவை.

உங்கள் பிள்ளைக்கு உங்களிடமிருந்து வேறு என்ன ஆதரவு தேவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள் . மாற்றத்தை எதிர்நோக்கும் உங்கள் பிள்ளையின் தேவைகளும் மாறும். இது போன்ற காலங்களில், உங்கள் அறிவுரைகள் அவர்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம். முழுமையாக மாற்றம் கண்டு, சமூகத்தில் வளம் வரும் உங்கள் பிள்ளைக்கு, முடிந்தவரை உங்களால் உபத்திரவம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் , உங்கள் விளக்கம் தேவையில்லை.

உங்கள் பிள்ளையுடனேயே இருங்கள். ஆரம்ப காலங்களில், உங்கள் பிள்ளை சில அசௌகரியங்களை எதிர்நோக்கலாம். பொது கழிப்பிடங்களை தேர்ந்தெடுப்பது, உடை மாற்று அறைகளை பயன்படுவது போன்ற தருணங்களில், உங்கள் உதவி அவர்களுக்கு தேவைப்படும்.

குறிப்புகள்:

பாலின அடையாளம், பன்முகத்தன்மை மற்றும் டிஸ்ஃபோரியா: உங்கள் குழந்தைக்கு ஆதரவு. https://raisingchildren.net.au/pre-teens/development/pre-teens-gender-diversity-and-gender-dysphoria/gender-identity,-diversity-and-dysphoria-supporting-your-child 


யார்…

… இந்த விஷயத்தில், நான் யாரை நம்புவது?

பெற்றோர்களாகிய நமக்கு, இது போன்ற காலங்களில் கலக்கம் மேலோங்குவது இயற்கையே. நம்பகரமான ஒருவரிடம் உங்கள் உள்ள ஆதங்கங்களை பகிர்ந்துகொள்ளலாமா வேண்டாமா என்ற தவிப்பில் நீங்கள் இருக்கலாம். அது மட்டும் அல்லாது, நம் நண்பர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் வேறு இருக்கும்.

இவரைத்தான் நம்பவேண்டும் என்று குறிப்பிட்டு சொல்வதிற்கில்லை. உங்களை புரிந்துகொள்ள அன்புள்ளம் யாராக இருந்தாலும் சரி. அது உங்கள் வாழ்கை துணையோ, நண்பரோ, உறவினரோ, யாராக இருந்தாலும், அவர்கள் நீங்கள் நம்பும் ஒருவராக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால், நிபுணத்துவ உதவிகளுக்கு உள்ளூர் ஸ்தாபனங்கள் மற்றும் சமூக நலன் தொண்டூழியர் சங்கங்களில் உதவி பெறலாம்.


எங்கே…

… என் குழந்தை / நான் உதவிக்கு செல்லலாம் ?

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ உதவி பெற பல உள்ளூர் ஸ்தாபனங்கள் பாலினம்-உறுதிப்படுத்தும் இடங்கள் உள்ளன.

Oogachaga என்பது லாப நோக்கமற்ற, சமூகம் சார்ந்த, தன்னார்வலர்களால் நடத்தப்படும் அமைப்பாகும். இந்த ஸ்தாபனத்தில், நேர் முக ஆலோசனை தருவதோடு, வாட்ஸாப்ப் செயலி மற்றும் மின்னஞ்சல் வழி சேவை வழங்குவர்.

SAFE சிங்கப்பூர் என்பது LGBTQ+ தனிநபர்களின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இடமாகும். இது தன்னிகரில்லா சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது:

  • LGBTQ நபர்களின் நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நன்கு புரிந்துகொள்ள உதவும் வளங்களை அளிக்கிறார்கள்

  • LGBTQ நபர்களுடன் பணிபுரிவது அல்லது வாழ்வது குறித்த தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்வதற்கான தளம் 

The T Project முதன்முதலில் சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்ட ட்ரான்ஸ் நபர்களுக்கான  காப்பகமாகும். அவர்கள் சேவை மேலும் அதிகமடைந்து, இப்பொது அவர்கள் ட்ரான்ஸ்ஜெண்டெர் நபர்கள் அவர்கள் தம் குடும்பத்தினர் எல்லோருக்கும் ஆலோசனை அளிக்கும் சேவையும் வழங்குகிறார்கள். நிபுணத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. 

… என் பிள்ளைக்கும் எனக்கும் மாற்றம் மாறுதல் பற்றி எங்கே
மேலும் விவரம் கிடைக்கும்?

TransgenderSG என்பது சிங்கப்பூர் வாழ் ட்ரான்ஸ்ஜெண்டெர் நபர்களுக்கான விரிவான வழிகாட்டியாகும். இதில் மேலும் திருநங்கை/திருநம்பி சமூகத்தில் இருப்போர்க்கு தேவையான வளங்கள் மற்றும் சேவைகள் பற்றிய விவரங்கள் இருக்கும்.

 இந்த வளங்களை நீங்கள்www.transgendersg.com இல் காணலாம்.

ஆசியா பசிபிக் திருநங்கைகள் நெட்வொர்க் (Asia Pacific Transgender Network/APTN) என்பது ஆசியா மற்றும் பசிபிக் நாடு வாழ், திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் பிற பாலின அடையாளங்களை கொண்டவர்களுக்கு, உரிமை கோரும் ஓர் ஸ்தாபனமாகும். இதை ஒரு ட்ரான்ஸ்ஜெண்டெர் நபரே நடத்துகிறார். ட்ரான்ஸ்ஜெண்டெர் நபர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர், நண்பர்கள் போன்றோர்களுக்கு இந்த தளம் உதவியாய் இருக்கும்.    

APTN பற்றியும், அவர்கள் சேவைகள் பற்றியும் அறிந்துகொள்ள www.weareaptn.org இனைய தளத்தை நாடுங்கள்.


வழிகாட்டியின் இயற்பியல் நகல் வேண்டுமா?

ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும் , நாங்கலே உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.

 

எங்களுடன் தொடர்பில் இருங்கள்!

 
 

இந்த திட்டம், இங்கிலாந்து அரசு உதவி உடன் தொடங்க பட்டது.